நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.
ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.
ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.
தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.
அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.
ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.
ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.
ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.
கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.
ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:
நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...
என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.
Source
0 comments:
Post a Comment