‘அறிவியல் கண்டுபிடிப்பு’, ‘விஞ்ஞானி’ போன்ற வார்த்தைகள் எல்லாம் மேலை நாடுகளுக்குத்தான் சொந்தம் என்ற நம் பிம்பத்தை மாற்றிப் போடக் கூடியது ஜி.டி.நாயுடுவின் வரலாறு. இந்தியாவுக்கே உரித்தான பல பயன்பாட்டுக் கருவிகளையும் உலகமே பயன்படுத்தும் சில இன்றியமையாத கருவிகளையும் உருவாக்கிய இவர், ‘படிக்காத மேதைகள்’ பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற கிராமத்தில் 1893ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தார் ஜி.டி.நாயுடு. இவரது முழுப்பெயர், கோபால்சாமி துரைசாமி நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். உறவினர்கள் வீட்டில் வளர்ந்ததால் சரியாகப் படிக்க முடியவில்லை. இளம் வயதில் ஜி.டி.நாயுடு ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த ஊதியத்தை சேமித்து, நண்பர்களிடமும் கொஞ்சம் கடன் பெற்று, திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையைத் தொடங்கினார். தன் அபரிமிதமான வர்த்தகத் திறமையால் குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். ஆனால், விரைவிலேயே அந்தத் தொழிலில் நஷ்டமடைந்து அனைத்தையும் இழந்தார். அதன்பின் போக்குவரத்துத் துறையில் நாட்டம் செலுத்தி, ‘யுனைடெட் மோட் டார் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தைத் துவங்கினார். அப்போதே தன் தொழிலுக்குத் தேவைப்பட்ட சில கருவிகளை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டார் நாயுடு. அவருடைய பேருந்துகள் வந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்து பேருந்து நிலையங்களில் வைத்தார்.
பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்தக் காலத்திலேயே ஒரு இயந்திரத்தைத் தயா ரித்துப் பயன்படுத்தினார். மோட்டார் ரேடியேட் டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், ரேடியேட் டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
மேலும் பழச்சாறு பிழிந்தெடுக்க கருவி, இன்றைய நவீன முகச்சவர பிளேடு போன்றவை நாயுடுவின் கண்டுபிடிப்புகளே. அது மட்டுமல்லாமல், விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு, 39 கதிர்கள் விளையும் பிரமாண்ட சோளச்செடி என இவரின் தாவர ஆராய்ச்சிகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள் இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்றே பெயர் சூட்டி ஏற்றுக் கொண்டனர்.
காப்புரிமை பிரச்னையில் விஞ்ஞானிகள் பலர் குழாயடிச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், தான் கண்டுபிடித்தவற்றை தன் பெயரில் பதிவு செய்யாமல் அனைத்து இந்தியர்களும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார் நாயுடு. தன்னைப் போல் தாய்நாட்டின் இளைஞர்கள் எல்லோரும் தொழில் நிபுணர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பாலிடெக்னிக் மற்றும் பொறியி யல் கல்லூரிகளைத் துவங்கினார் ஜி.டி.நாயுடு. வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஜி.டி.நாயுடு, 1974ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி மரணமடைந்தார். பெயர், புகழுக்காக விஞ்ஞானிகள் ஆனவர்கள் மத்தியில், விஞ்ஞானியாகவே பிறந்தவர் இவரென்று அடித்துச் சொல்லலாம்.
0 comments:
Post a Comment