பேறு கால விடுமுறை முடிந்து, மீண்டும் பணிக்கு சேரும் பெண்கள், தங்களது கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ரத்த வங்கி, கண் வங்கி போன்று தாய்ப்பால் வங்கியும் வந்து விட்டது. சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை தாய்ப்பால் வங்கி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, கட்டாயம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்களும், உலக சுகாதார அமைப்பும் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் பணிக்கு செல்லும் தாய்மார்களால் பணிபுரியும் இடங்களில் குழந்தைகளுக்கு போதிய அளவு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. அந்த குறையை இந்த தாய்ப்பால் வங்கி ஓரளவுக்கு தீர்த்து வைக்கும்.
இதுபற்றி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையத்தின் குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் எல்.என். பத்மாஸனி கூறியதாவது:-
பால் சுரப்பு ஆதரவு திட்டம் என்ற இந்த திட்டத்தை ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கார்பரேட் நிறுவனங்களிலும் செயல்படுத்த முடியும். அதற்கு தேவை குளிர்சாதன பெட்டியுடன் (பிரிட்ஜ்) கூடிய ஒரு சிறிய அறை, வசதியாக அமரக்கூடிய ஒரு சேர். மார்பில் இருந்து பாலை உறிஞ்சி எடுக்க கூடிய தரமான பம்ப் மற்றும் நோய்க்கிருமி தடுப்பு கருவி (ஸ்டெரிலைசர்) ஆகியவைதான்.
இப்படி பெறப்பட்டு சேகரித்து வைக்கப்படும் தாய்ப்பாலை தேவைப்படும்போது மோட்டார் பொருத்தப்பட்ட பம்ப் மூலம் எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி பெறப்படும் தாய்ப்பால் சாதாரண சீதோஷண நிலை கொண்ட அறையில் 2 மணி நேரமும், குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் 7 நாட்கள் வரையும் கெடாமல் இருக்கும்.
பொது இடங்களில் குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் புகட்ட முடியாத தாய்மார்களுக்கு குறிப்பாக பணிபுரியும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாய்ப்பால் வங்கி திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே பயிற்சி அளித்து உதவுகிறது. இதேபோல தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு, இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இலவச பயிற்சி முகாம்களும் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 99400 37219 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
Post a Comment